"தமிழர்கள் கொல்லப்படவேண்டியவர்கள்”

"தமிழர்கள் கொல்லப்படவேண்டியவர்கள்”

கட்டுரை: என்.சரவணன்

காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2024

 

 

"தமிழர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் மகாவம்சம் தருகிற சான்று

 

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசுக்கோ, சிங்களச் சூழலுக்கோ அவ்வழித்தொழிப்பு பற்றிய எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழர்களை கொன்றொழித்த பின்னர் இத்தகைய குற்றவுணர்ச்சி ஏற்பட்டதைப் பற்றி மகாவம்சம் பதிவு செய்திருக்கிறது. ஆனால் துட்டகுமுனுவுக்கு உறுத்திய மனசாட்சியோ தார்மீக அறமோ பௌத்த பிக்குகளுக்கு இருக்கவில்லை என்பதை மகாவம்ச வரலாற்றுப் பதிவுகளில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இக்கட்டுரை அதைப் பற்றியதே.

 

சிங்கள பௌத்த, இன சாகச, இனத்துவ செருக்குக்கு, இனப்பெருமித உருவாக்கப் பின்னணியின் மகாவம்ச ஐதீகங்களுக்கு மிகப் பெரும் பங்குண்டு என்பதை சொல்லி வருகிறோம்.

 

இனப்படுகொலைக் கலாச்சாரத்துக்கான வரலாற்றுப் பின்னணியும் இந்திய எதிர்ப்புவாதமும் கூட அந்த மரபில் வந்தவை தான். இலங்கையில் நிகழ்ந்த பல்வேறு இனவெருப்பு, இனவொதுக்கல், இனவெறிக்கான அடிப்படைகள் திடீரெனத் தோன்றியவை அல்ல. அதற்கான மனவிருப்பும், செய்த, செய்து வருகிற அக்கிரமங்களுக்கான சுயசமாதானமடைதல், சுயசரிகட்டுதல் என்பற்றுக்கான மூலம் மகாவம்சத்தில் உள்ளது. ஒரு நீண்ட வரலாற்றினால் வடித்தெடுக்கப்பட்ட ஒரு வார்ப்புக்கு சிங்களத் தலைவர்கள். அறிஞர்கள், மதத்தலைவர்கள், நிறுவனங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைவரும் ஆளாகியுள்ளனர்.

 

மகாவம்சத்திலேயே அதிக அத்தியாயங்கள் கொடுக்கப்பட்ட ஆட்சித்தலைவன் துட்டகைமுனு தான். மகாநாம தேரரால் எழுதப்பட்ட முதலாவது தொகுதியில் 37 அத்தியாயங்களில் 22லிருந்து 31 வரையான சுமார் ஒன்பது அத்தியாயங்கள் துட்டகைமுனு பற்றியது. இன்னும் சொல்லபோனால் மகாவம்சத்தின் நான்கில் ஒரு பகுதி துட்டகைமுனு பற்றியது. சமீபத்தில்

 

வெளியான மகாவம்சத்தின் 6வது தொகுதியில் கூட ஜே,ஆர், பிரேமதாசா, சந்திரிகா, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு கூட தலா ஒரு அத்தியாயம் தான் கொடுக்கப்பட்டிக்கிறது. துட்டகைமுனு - எல்லாளன் சிங்கள - தமிழர் போராக வரலாறு நெடுகிலும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்களாகவும், அழித்தொழிப்பாளர்களாகவும் புனைகிற பல ஐதீகங்கள் மகாவம்சத்தில் உள்ளன.

 

மகாவம்சத்தில் 25வது அத்தியாயம் துட்டகைமுனுவின் வெற்றி பற்றிய அத்தியாயமாகும். அவ்வத்தியாயத்தில் 108-113 வரையிலான சுலோகங்கள் தமிழர்களைக் கொன்றது பாவம் இல்லை என்று பிக்குமார்களால் துட்டகைமுனுவுக்கு சமாதான சொல்லும் பகுதிகளாகும்.

 

5ஆம் நூற்றாண்டில் மகாவம்சத்துக்கு மூலாதாரமாக மகாநாம தேரரால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுவது 3ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட தீபவம்சம். தீபவம்சத்தில் கூட துட்டகைமுனுவுக்காக ஒதுக்கப்பட்டது ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே. அதுவும் கூட பௌத்த மத வளர்ச்சிக்காக துட்டகைமுனு ஆற்றிய பங்களிப்பு பற்றிய விபரங்களே அதிகம். ஏறத்தாழ மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள அதே காலப்பகுதியைத் தான் தீபவம்சமும் கூறுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. தீபவம்சம், மகாவம்சம் ஆகிய இரண்டுமே அன்றைய விகாரைகளில் பேணப்பட்டுவந்த சுவடிகளில் இருந்தும், செவிவழிக்கதைகளில் இருந்தும் எழுதப்பட்டவையே. அவ்வாறிருக்க, மகாவமசத்தில் மேலதிகமாக புனைவுகளை சேர்க்கும் தேவை மகாநாம தேரருக்கு ஏற்பட்டிருப்பதை உணராலாம். இதைப் பற்றிய விபரமான ஆய்வுகள் சிங்களத்தில் உள்ளன.

 

பேராசிரியர் கணநாத் ஒபேசேகர "துட்டகைமுனுவின் மனசாட்சிஎன்கிற ஆய்வுக் கட்டுரையில் இதைப் பற்றி குறிப்பிடும் போது, மகாநாம தேரர் இந்த வகை சாகசவாத வர்ணனை வடிவத்தை மகாபாரதக் கதைகளில் இருந்துபெற்றிருக்கலாம் என்கிறார்.!(1)

 

மகாவம்சத்தில் வரும் துட்டகைமுனுவின் மனசாட்சி பற்றிய கதையாடல்களை நோக்கும் போது மகாபாரதக் காவியத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மனநிலையை ஒத்திருக்கிறது. என்று எனக்குத் தோன்றுகிறது.

 

அர்ஜுனன் தனது உறவினர்களோடு கடும் மோதலில் ஈடுபட்டு அவர்களை அழிக்கத் துணிகிறான். தனது உறவினர்களையே கொல்லும் நிலை ஏற்பட்டிருப்பதைப் பற்றிய குற்ற உணர்வை அங்கு அவனுக்கு தேரோட்டியாக இருந்து யுத்தத்தில் வழிகாட்டிக் கொண்டிருந்த கிருஷ்ண பகவனிடம் கூறுகிறான். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் போர்க்களத்தில் நடக்கும் கொலைகள் க்ஷத்திரிய தர்மப்படியே நடப்பதால் அது தவறில்லை என்று

 

விளக்குகிறார். மேலும், எதிரிகளின் செயல்களின் மூலம் கொடிய கனிகளை அறுவடை செய்யத் தொடங்கிவிட்டதால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கருதலாம், அவர்களைக் கொல்வதைக் குறித்து உனது மனதில் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது

 

அர்ஜுனனிடம் கிருஷ்ணர் தான் ஒரு கொலைகாரன் அல்ல என்றும், எதிரிகளின் கர்மவினைக்கு ஆதரவாக மட்டுமே இருப்பதாகவும் கூறுகிறார். இந்த அறிவுரையைக் கேட்ட

 

 

அர்ஜுனனின் குற்ற உணர்ச்சிகள் மறைந்தன." என்கிறார். இத்தகைய காட்சியே துட்டகைமுனுவுக்கு கிடைத்த பௌத்த பிக்குமாரின் உபதேசம் அமைந்திருக்கிறது.

 

துட்டகைமுனுவின் மனசாட்சி

 

அந்த மகாவம்ச சுலோகங்கள் இப்படிக் கூறுகின்றன. "எல்லாளனை தோற்கடித்தது, தமிழர்களைக் கொன்றது பற்றி மகிழ்ச்சியுறாத துட்டகைமுனுவை சமாதானப்படுத்த புவங்கு என்கிற தீவைச் சேர்ந்த பிக்குமார் அங்கிருந்து எட்டு பிக்குமாரை அனுப்புகிறார்கள்.

 

நடுச்சாமத்தில் வந்த அவர்கள், அரண்மனை வாசலில் இறங்கினார்கள். தாங்கள் அங்கே வந்திருப்பதை அறிவித்து ஆகாயமார்க்கமாகவே அரண்மனையின் மேல்தளத்தை அடைந்தார்கள். அவர்களை வரவேற்ற மகா அரசன், அவர்களை அமரச் செய்து, பல விதங்களில் மரியாதைகள் செலுத்திவிட்டு, அவர்கள் வந்ததற்கான காரணத்தை வினவினான், மனிதர்களின் அரசனே, தங்களைச் சமாதானப்படுத்த, நாங்கள் புவங்குதீவின் மகாசங்கத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம். அப்பொழுது மீண்டும் அரசன் அவர்களிடம் கூறினான்: 'என்னால் இலட்சக்கணக் கானோர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதால், வணக்கத்திற்குரியவர்களே, எனக்கு எப்படி அமைதி கிடைக்கும்?"

 

'இந்தச் செயலால், நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையில் ஏதும் தடையில்லை. மனிதர்களின் அரசனே, தங்களால் ஒன்றரை மனிதர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஒருவன், மும்மணிகளிலே சரணடைந்து விட்டான்; மற்றவன், பஞ்சசீலத்தை மேற்கொண்டு விட்டான். நம்பிக்கையற்றவர்களும் தீயவர்களுமே பிறர்; அவர்கள் மிருகங்களைவிட உயர்வாக மதிப்பிடக் கூடியவரல்லர்'. ஆனால் தாங்களோ, புத்தரின் நெறிகளுக்குப் பல வழிகளிலே புகழ் சேர்த்திருக்கிறீர்கள்; அதனால், மனதிலிருந்து கவலையை அகற்றுங்கள், மனிதர்களின் அரசே!(2) மிருகங்களைக் கொல்வது பாவம் என்று பௌத்த தர்மம் போதிக்கின்றது. ஆனால், மகாவம்சத்தில், தமிழர்கள் மிருகங்களைவிட மேலானவர்கள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பௌத்த தர்மத்தின்படி மிருகங்களைக் கொல்வது பாவமேயாயினும், தமிழர்களைக் கொல்வது பாவமில்லை என்ற போதனை, மகாவம்ச நூலில் பௌத்த துறவிகள் மொழிவதன் வாயிலாகப் பதியப்பட்டுள்ளது.

 

கி.மு இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த துட்டகைமுனு - எல்லாளன் யுத்தத்தை, தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான இன யுத்தமாக வர்ணிக்கும் மகாவம்சத்தில், இலட்சக்கணக்கான தமிழர்கள் மடியும்படி நேரிட்டது தனக்குக் கவலையளிப்பதாக மன்னன் துட்டகைமுனு கூறுவதாகவும், அப்போது மன்னனை ஆற்றுப்படுத்துவதற்காகப் பௌத்த துறவிகள் பின்வருமாறு ஆறுதல் கூறுவதாகவும் ஓர் உரையாடல் வருகின்றது.

 

"இந்த செய்கையின் காரணமாக நீ சொர்க்கத்திற்குப் போகும் பாதையில் எவ்வித தடையும் ஏற்படாதுஎன்று துறவிகள் மன்னனுக்குக் கூறுவதுடன், அவ்வாறு கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் "நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். தீய வாழ்வை மேற்கொண்டவர்கள். மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள் எனப் பௌத்த துறவிகள் மன்னனுக்கு எடுத்துரைத்தனர்என்று, மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சம் கூறுகிற அக்கருத்தைச் சிங்கள மக்கள் நம்புகிறார்கள் என்பதே கவனத்திற்குரியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக சிங்கள மக்களின் மனங்களில் இக்கருத்து வேரூன்றி, தமிழர்கள் மிருகங்களைவிடக் கீழானவர்கள் என்றும், அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் என்றும் ஒரு வரலாற்று மன உணர்வு அவர்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது.” அதுமட்டுமல்ல, இதன் நீட்சியாக இன்னொரு முக்கிய சிங்கள வரலாற்று இலக்கியத்தையும் இங்கே ஆதாரப்படுத்தவேண்டும்.

 

மகாவம்சம் வெளிவந்து ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட சத்தர்மலங்கரா அக்கருத்தை மேலும் மெருகூட்டி உயிர்ப்பிக்கிறது, மன்னனின் கவலைகளைப் போக்குவதற்காக, அவனால் கொல்லப்பட்ட தமிழர்கள் காட்டுமிராண்டிகள், மூடநம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மரணம் மாடு, நாய், எலிகளின் மரணத்திற்கு சமமானது. என்கிறது.

 

பௌத்த பஞ்சசீல கொள்கைக்கே மாறான இந்த செய்கையை பௌத்தத்தின் பேரால் ஆறுதல் படுத்தவும், நியாயப்படுத்தவும் பௌத்த பிக்குமாரால் எப்படி முடிகிறது என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.

 

இலங்கை போற்றும் பிரபல பௌத்த பல்துறை அறிஞரான வல்பொல ராகுல தேரர் இந்த சம்பவம் குறித்து நடைமுறை ரீதியான பார்வையைக் கொண்டுள்ளதைக் காண முடியும்

 

"இது புத்தரின் தர்மத்திற்கு முற்றிலும் முரணானது. பௌத்தத்தின் படி, எந்த வகையிலும் உயிர்களைக் கொல்வது தவறான செயல். புத்தசாசனத்தை பேணுவது, பாதுகாப்பது, வளர்ப்பது என்கிற பேரில் இது செய்யக்கூடாத ஒன்று" என்கிறார்.(3)

 

அதேவேளை நாரத தேரர், இப்படிக் கூறுகிறார். "துட்டகைமுனு மன்னன் தமிழர்களைக் கொன்று குவித்தான் அவன் மத மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் புண்ணியத்தை அடைந்தான். இந்தப் புண்ணியங்களால் பெற்ற பலத்தால் அவனின் தீய செயல்கள் செயலற்றுபோயின." என்கிறார்.

 

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் துட்டகைமுனு காலத்தில் அதாவது கி.மு. 160களில் இலங்கையில் தெளிவான இனக்குழும பிரிவுகள் இருந்ததற்கான சான்றுகளைக் காண முடிவதில்லை. இன-மத முரண்பாடுகளோ, அவற்றின் அடிப்படியிலான தெளிவான பகைமையோ நிலவியமைக்கான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி ஆய்வாளர் எச். எல். செனிவிரத்தின இவ்வாறு விளக்குகிறார்.(4)

 

"துட்டகைமுனு எல்லாளன் யுத்தம் பற்றி தேசியவாத வரலாற்றாசிரியர்களின் எழுத்துகள் அனுராதபுரக் காலத்துச் சமூக அரசியல் நிலைமைகள் பற்றிய தவறான கருத்துகளை மக்களிடையே உருவாக்கியுள்ளன. அக்காலத்தில் சிங்கள இனக்குழுமம், தமிழ் இனக்குழுமம் என்று இருவேறு குழுமங்கள் தெளிவான மொழி, சமய அடையாளங்களுடன் வளர்ச்சி பெற்றிருந்தன என்பது ஆதாரமற்றது. மகாவம்சத்தை தவறான முறையில் வாசிப்புச் செய்து இவ்வாறு ஒரு பொய்மையைத் தேசியவாத வரலாறு உருவாக்கியுள்ளது. துட்டகைமுனு - எல்லாளன் யுத்தத்தில் துட்டகைமுனுவிற்கு எதிராகப் போரிட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்லர். துட்டகைமுனு எல்லாளனை எதிர்கொண்டு போரிடுவதற்கு முன்னர் 32 ஆட்சியாளர்களுடன் போரிட்டு அம்மன்னர்களைப் போரில் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் உண்மை யாதெனில், 32 தனித்தனியான சுதந்திரமான சிறிய இராச்சியங்கள் இருந்தன. அந்த இராச்சியங்களின் மன்னர்களைத் துட்டகைமுனு தோற்கடித்தான் என்பதாகும். 32 வெவ்வேறு அதிகார மையங்கள் (Power Centres) இருந்தன. அவை யாவற்றையும் வெற்றிகொண்ட துட்டகைமுனு அவற்றை 'ஒரு குடைக் கீழ்' (One Umbrella) கொண்டுவந்தான். இதன் பொருள், அவற்றையெல்லாம் அழித்து ஒன்றுபடுத்தல் (Unification) என்பதன்று. வரலாற்றுப் பாட நூல்கள் 'ஒரு குடையின் கீழ்' என்பதை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட மத்தியப்படுத்தப்பட்ட அரசாட்சியை துட்டகைமுனு நிறுவியதாகச் சித்தரித்துள்ளன."

 

மதத்தின் பேரால் கேள்வியின்றி எந்தவொரு பாதகச் செயலையும் ஏற்கவைக்க முடியும் என்பதற்கான சான்றுகளை புராணக்கதைகள் பலவற்றில் இருந்து நாம் சான்றுகளைப் பெற முடியும். கீதையில், மகாபாரதத்தில் யுத்தத்துக்கும், அழித்தொழிப்புக்கும் இந்து மத கர்மவினை நம்பிக்கைகளுக்கு ஊடாக எவ்வாறு நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றவோ அதுபோல மகாவம்சத்திலும் பௌத்தத்தில் பேரால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. துட்டகைமுனுவை அவனது குற்ற உணர்ச்சியிலிருந்து மீட்கிறது. துட்டகைமுனு அதற்கு எதுவாக இவ்வாறு குறிப்பிட்டதையும் பதிவு செய்கிறது மகாவம்சம்.

 

"என்னுடைய இந்த நடவடிக்கைகள் ஒருபோதும் அரசாட்சிக்கானதல்ல மாறாக என்னுடைய இந்த முயற்சிகள் அனைத்தும் புத்தசாசனத்தை ஸ்தாபிப்பதற்காகத்தானதே." (மகாவம்சம் XXV; 117) என்கிறான்.

 

 

துட்டகைமுனு சிங்கள பௌத்தத்தின் பேரால் தமிழர்களை கொன்றொழித்ததைப்போல 2150 ஆண்டுகளின் பின்னர் அதே சிங்கள பௌத்தத்தின் பேரால் தமிழர்கள் கொடூரமாக கொலையுண்டார்கள். அதைப் பற்றிய முன்னெச்சரிக்கையை அதே மகாவம்சத்தை மேற்கோள் காட்டி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2005 ஆம் ஆண்டு மாவீரர் உரையில் இப்படி குறிப்பிட்டதை இங்கே பதிவு செய்யலாம்.

 

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

 

அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப்போவதில்லை. இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்ந்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத் தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

 

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள -பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது.(5)

 

துட்டகைமுனுவின் மனசாட்சி அன்று உலுக்கிய அளவுக்கு இன்றைய வளர்ச்சியடைந்த சமூகத்தில் சிங்களத் தலைவர்கள் எவருக்கும் வரவில்லை என்பதே இலங்கையின் தேரவாத பௌத்த தன்னை மெய்ப்பித்ததற்கான சான்று.

 

(1)    பேராசிரியர் கணநாத் ஒபேசேகர, "துட்டகைமுனுவின் " (03.05.2015)https://kathika.lk/( ) என்கிற சிங்கள மொழிக் கட்டுரைத் தொடர்)

(2)    Geiger, Wilhelm, Mahavamsa : Grande Chronique de Ceylan, Londres : Pub. pour la Pali Text

             Society par l'Université d'Oxford, 1912

(3)    Walpola Rahula, Histoire du bouddhisme à Ceylan, M. D. Gunasena ; Colombo ; 1956

(4)     H.L. Seneviratne- Bouddhisme, identité et conflit, 1-29 pages (2004), Centre international d'études ethniques, Colombo.

(5)    விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் உரை, 2005

 

fhf;if rpwfpdpNy rQ;rpiff;F

 ed;wp