தாயகத்தின் தாய் – ச.பொட்டு

தாயகத்தின் தாய் – ச.பொட்டு

தாயகத்தின் தாய் – ச.பொட்டு


அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது பணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது.

ஏதோவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாதத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும் போல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல.

என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நினைவுப்பதிவுகளில்.... கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்... நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் தெரியும்.

சில பெண்பிள்ளைகளுடன் இளையவனாய் ஒரேயொரு மகன் என்பது அந்த மகன் மீது அதீத அன்புக்கு காரணமாய் அமைவது இயல்புதான். அம்மாவுக்கும் அப்படித்தான். சில பெண் சகோதரிகளுடனான அந்த ஒரேயொரு மகன் மீது கொள்ளைப் பாசம்.
காலத்தின் தேவையாக அந்த ஒரேயொரு மகன் போராளியாக ஆனபோது, அம்மாவின் அந்த அதீத பாசத்திற்;கு சோதனை வந்தது. அந்தச் சோதனை எல்லா அம்மாமாருக்கும் வருவது போன்ற பாசத்தின்தளத்தில் எழும்வேதனை மட்டுமல்ல.


**************************


அம்மா அந்தக் காலத்து பழசுதான். ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு வாதியல்ல. இளமைக்காலத்தில் இருந்தே சமூகத்தின் மீதான பார்வையை செலுத்தக்கூடியவர். எம்மினத்தின் அரசியல் பயணத்தின் அம்சங்களை காலத்தால் அறிந்தவர். மென்முறையில் எழுந்த அரசியல் கோரிக்கைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதை கண்ணால் கண்டறிந்து குமறியவர். அரசியல் மென்முறைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதன் மறுவடிவமாக அரசியல் வன்முறை வடிவம் கொண்டதை ஆரம்ப காலத்தில் இருந்தே வியப்புடன் பார்த்தவர்.


காலம் தன்பாட்டில் ஓடி, அம்மா குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்த்து..ஒருசராசரி பெண்ணாக, தாயாக ஆனார். இது வரை அம்மாவால் அப்படியாக வாழவும் முடிந்தது. ஆனாலும் மனதில் ஆயுதப் போராட்ட நியாயத்தின் கடமைக்காய் தன் கடைசிப்பிள்ளை அம்மாவின் பாசத்தை கொள்ளை கொண்ட செல்லமகன் ஆயுதம் ஏந்தப்புறப்பட்டதை அம்மா எப்படி எதிர்கொள்வது? பெற்ற பாசமா? இனத்தின் சோகமா? என்ற தர்ம சோதனையில் அம்மா குழம்பி மகனது ஆயுதப்போர் வடிவத்தெரிவை மனதால் எற்று சமநிலைக்கு வர காலம் பிடித்தது.


*****************************


இப்போது மகன் போராளி. தெருவில் போகவர அம்மாவை எதிர்கொள்வான். மகன் இப்போது வளர்ந்து விட்டான். வளர்ந்தவனையே கூட குழந்தையாய் பார்க்கும் அம்மா மனம், இப்போது மகனைக் கண்டு வியந்தது தன்ர சின்னப்பிள்ளை இப்போது பெரிய ஆளாய், ஏதேதோ வேலையாய் அங்கிங்கு ஓடித்திரிவது அம்மாவுக்கு சொல்ல முடியாத பெருமைதான்.


இயக்கத்தில் இணைந்த காலத்தில் மகன் சின்னப்பொடியன். வயதுக்கே உரிய வேகமான செயற்பாடும் குழப்படியும் கொண்ட இளைய போராளி. அவன் செய்யும் குழப்படிகள், வாங்கும் தண்டனைகள் எதுவும் அம்மாவுக்குத் தெரிய நியாயமில்லைத்தான். அதே போல் வடமராச்சி பொறுப்பாளர் தண்டனை கொடுத்து களைத்துப்போயோ அல்லது இவன்தான் தண்டனை செய்து களைத்தப்போயோ என்னவோ ஆள் நெல்லியடியில் இருந்து சாவகச்சேரிக்கு நடந்தே வந்து சேர்ந்தும் அம்மாவுக்கு தெரிய எந்தநியாயமும் இல்லைத்தான்.


இதற்கிடையில் மகன் சண்டைக்களத்தில் என்ற செய்தியை மட்டுமே கேள்விப்பட்டு கவலைப்பட்ட அம்மா. கடும் சண்டை என்ற செய்தியால் எல்லா அம்மாக்களையும் போல அம்மாவும் பதறிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் மகன் காயமடைந்த செய்தி, பதறிய மனதுடன் அம்மா ஓடித்திரிந்தும், மகனின் நண்பர்கள் மூலம் அவன் நிலையறிந்து துடித்ததுமாக கழிந்தது நாட்கள். அம்மாவுக்கு மகனின் சுகநலன் அறியும் தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டன. 'இதுவொரு சின்னக்காயம் இன்னும் கொஞ்ச நாள்ள காம்புக்கு வந்திடுவான்' என்று பொறுப்பாளர் சொல்லும் பொய்யான கதையை மீறி' வயிற்றுக்காயம்' பதினைந்து தையலுக்கு மேல் போட்டிருக்கு' 'இன்னும் சாப்பிடத் தெடங்கேல்ல' என்று உண்மைகளை அறிந்துவிடும் அளவுக்கு அம்மாவுக்குத் தொடர்புகள் எற்பட்டு அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு போய்வரவும் தொடங்கிவிட்டா.


மருத்துவமனைக்கெதியாக என்னை துண்டு வெட்டி விடுங்கோ உடனே சண்டைக்குப் போகவேணும்' உறுதியின் வெளிப்பாடுகள்.


'என்ர இடத்தில ஆமியின்ர பொடியும் ஆயுதமும் இருக்கு காவு குழு அனுப்புங்கோ'


'..........' எம்மையா? எதிரியையா? என சிந்திக்க வைக்கும்


எழுத்தில் சொல்லமுடியாத வசவுகள். மருந்தின் மயக்கத்தில் தம் நிலை மறந்து உளறல்கள்.


'ஜயோ தாங்கேலாமல் கிடக்கு பெத்தடினைப் போடுங்கோ.....ஓ...'


வேதனை தாங்கேலாமல் கிடக்கு இந்தக் காலை வெட்டுங்கோ' கேட்போரின் கண்களில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைக்குரல்கள்.


மருந்துகளின் நெடியை மீறிய புண்களின் மணம்.


*********************************


மகனைப் பிரிந்திருந்த அம்மா தனது பாச உணர்வுகளும் அடிமனத்து விடுதலை உணர்வுக்குமாக ஒரு வடிகாலை தேடிக்கொள்ள, காயமடைந்த போராளிகளை பராமரிப்பவர்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் காலம் அம்மாவுக்கு விடுதலைப் போரை முன்னை விட கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தது. காயமடைந்த போராளிகளுடனான பரிச்சயமும், பழக்கமும் அம்மாவுக்கு போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்துவைக்க அவவுக்கே தெரியாமல் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனார்.


வெளியில் இருந்து போராட்டச் செய்திகளை மட்டும் கேட்பதற்கும், வெற்றிகளை கேட்டு மகிழ்சி அடைவதற்கும் அப்பால் அந்தச் செய்திகளின் உருவாக்கத்தின் யதார்த்தம் அம்மாவை அதிகமாக சிந்திக்க வைத்தது.


விட்டுக் கொடுக்கப்பட முடியாததான இவ்விடுதலைப் போராட்டம் இத்தனை கடினமானதா? இவ்வளவு கண்ணீரை வரவழைப்பதா? இழப்புக்களை குறைத்தோ அல்லது குறைக்கவோ ஏதாவது செய்யமுடியாதா? அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ? இல்லையோ? அம்மாவாகச் சிந்தித்தா. எல்லாப் போராளிகளையும் தன் பிள்ளையாய் பார்த்த அம்மாவாக சிந்தித்தா..

*****************************************


எம் தாயகத்தில் விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கொடுமையின் ஒரு சிறு பங்காவது எதிரியின் கோட்டைக்குள் திருப்பிக் கொடுக்கப்படுவது அம்மா திருப்தியுடன் பார்க்கும் செய்திதான். அதுவுமல்லாது எதிரியின் பெரும் நிலைகள் அவ்வப்போது ஆங்காங்கே அழிக்கப்படுவதும் அது எதிரிக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியும் அம்மா அறிவார். அதில் எம் போராளிகள் இங்க போல் பெரும் இழப்புக்களை சந்திப்பதில்லை என்பதும் அம்மாவுக்கு தெரியும்.


ஏற்கனவே எரிபற்று நிலையில் இருந்த அம்மாவின் மனம்தான் இந்த வழியை நாடிப்போனதோ அல்லது அம்மாவை அறிந்து சந்தித்த அந்த போராளிகள்தான் அம்மாவின் மனதில் தீயை மூட்டினரோ? என்னவோ? அம்மா இப்போது புலனாய்வுத்துறையின் ஆள், முகவராம் வெளிவேலைக்கான முகவாரம்.


அம்மா இப்போது மாறி விட்டா. முன்பு குடும்பம் அயலவர் என்று எல்லா இடமும் செய்தி சொல்லி மருத்துவமனை சென்று வருபவர். இப்போது சுருக்கமாக வேறெங்கோ தனியாகப் போய்வரத்தொடங்கிவிட்டா. மருத்துவமனை போய்வர நேரம் இருக்குதோ இல்லையோ அம்மா இப்ப அங்கை எல்லாம் போய்வரக்கூடாதம். மருத்துவமனை என்றில்லை. இயக்கம் இருக்கிற இடம் ஒன்றுக்கும் போய் வரவும் கூடாதாம்.இயக்கத்திற்கு ஆதரவாக கதைக்கக் கூடாதாம்.


அம்மாவுக்கு தன்னையே நம்ப முடியாதபடி ஆச்சிரியம் கலந்த பெருமை சி.ஜ.ஏ, கே.ஜி.பி மொசாட் என்று புலனாய்வு அமைப்புக்களை பட்டியலிடுவதுடன் எங்கட வேலைத்திட்டம் என்று ஏதோ விளக்கங்கள். அம்மாவுக்கு எதுவெது விளங்குகிறதோ? இல்லையோ? மனதுக்குள் குறுகுறுவென்று ஆர்வ முனைப்பு.

அம்மாவுக்குள் இப்போது வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அவர் இப்போது இன்னொரு ஆளாகவும் செயற்படக் கூடியவராக ஆகிவிட்டார்.

தலைநகர் அதிர்ந்தது' தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார் 'புலிகளைத் தேடி வலைவிரிப்பு' சூத்திரதாரி தலைமறைவு' அடையாளம் காணப்பட்டவரின் பெயர் போலியானதென பொலிசார் தெரிவிப்பு' உலகமே செய்திகளை வியப்புடன் நோக்கும். சூழ உள்ள சுற்றத்தினரும் கூட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல செய்திகளும் கற்பனைகளுமாக கதைகதையாய் பீற்றித்திரிவார். எல்லாவற்றையும் அமைதியாக அமத்தலாக பார்த்தபடி பட்டுக்கொள்ளாமல் இருப்பா அம்மா.


ஆக, அம்மாவுக்குள் இப்போ வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வப்போது வந்து அன்பு மகனை பார்த்துக்கொள்வது தவிர மற்றும்படி எவ்வளவோ மாறிப்போனா அம்மா.

***********************************


இதற்கிடையில் அம்மாவுடன் மகனுக்கு சரியான கோபமாம். அம்மாவின் அக்கா பெரியம்மா – மூலமாக செய்தியனுப்பியிருந்தான். எட இவர் பெரிய மனுசானாகி இப்ப இவருக்கு கோபமும் வருமே' என செல்லமாய் சொல்லிவிட்டிருந்தா அம்மா.


இவனது போராளி நண்பனொருவன் ஊர்ப்பக்கமாய் வந்தபோது' சின்னதாய் ஒரு மூஸ் அடித்து அம்மாவிடம் போய் இவனது சுகநலன் சொல்லியுள்ளான். அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அனுப்பிவிட்டவவாம் அம்மா. போய்வந்தவன் குறையாகவோ இல்லை பகிடியாகவோ சொன்னானோ அல்லது அவன் சொல்லாமல்விட இவன்தான் கதைவிட்டு அறிந்தானோ என்னவோ? ஆளுக்கு சரியான கோபம்.


அம்மா வழமையில் அப்படியில்லை. எல்லோரையுயம்' குறிப்பாக போராளிகளை' உபசரிப்பதில் அதுவும் சக்திக்கு மீறியே உபசரிப்பதில் முன்னிப்பவர்தான். அன்று அந்த ஏழைத்தாய்க்கு என்ன கஸ்ரமோ வசதிக்குறைவோ?

வீம்புக்காக அம்மாவில் கோபம் போட்டாலும் அவ்வப்போது பெரியம்மாவின் வீடு வந்து' அம்மாவில் இப்போதும் கோபம்தான்' என்று சொல்லிப் போவான்.

மகன் பெரியம்மா வீடு வந்து. அம்மாவில் கோபம் சொல்லி நிற்பதும். அம்மாவின் சமையல் வேலிக்குள்ளால் பயணித்துபெரியம்மா வீடு வந்து மகனிடம் சேர்வதும் நல்லதொரு நாடகம். அம்மாவின் கை மணம் தெரிந்தும் தெரியாதது போல நல்ல சாப்பாடு என பெரியம்மாவை புகழ்ந்து விட்டு போகும் பிள்ளையை வேலியால் பார்த்திருப்பா அம்மா. தான் பார்ப்பது தெரிந்தால் அவருக்கு இன்னும் எழுப்பமாய்ப் போய்விடும் என அம்மா, மறைவாய் நின்று சிரிப்பது தெரியாமல் அம்மாவை தேடுவான் பிள்ளை.


அன்றைய சுகமும் இன்றைய சோகமுமாய் ஆகிப்போன சின்னச்சின்ன ஞாபகங்கள் இப்படி எத்தனை?


******************************


காலம் கொஞ்சம் ஓடிப் போக மகன் இப்போது முதிர்ந்தவனாகி விட்டான். அம்மா எதிர்பார்க்க முடியாதபடி ஏன் அவனே கூட எதிர்பார்க்காமல் பொறுப்புள்ளவனாகிப் போனான். இயக்கத்தின் ஆசிரியர் அணியொன்றின் உதவியாளன் என்பதும், அவ் ஆசிரியர் அணியுடனும் அவர்தம் பணியுடனும் அவனுக்கேற்பட்ட ஈடுபாடுமாக அவனைப் படிப்படியாக முதிர்ந்தவனாக ஆக்கிவிட்டதோ?


சண்டை அணியில் நிற்கும் போது நண்பர்கள் செய்தது போல அவனும் கரும்புலி விண்ணப்பக் கடிதம் எழுதிக் காத்திருந்தது பழையகதை. இப்போது மொழிப்பெயர்ப்புத் திரைப்பட உருவாக்கற்பொறுப்பை கைமாற்றிக் கொடுத்து விட்டு, அவன் கரும்புலிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதே புதிய நிலை.


அணிசேர்ப்பு, தொடர்வகுப்பு,கடும்பயிற்சி,எதிரியின் தலைநகர் அறிமுகமென தயார்படுத்தல்களுடன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம் வாழ்வுமாக மகனும் இப்போ வேறொரு உலகிற்கு மாறிப்போனான்.


************************************


மகன் வழிதெருவில் எதிர்படாமல் போனதும், வழமைபோல தேடிப்போன இடத்தில் சரியான பதில் இல்லாது போனதும் அம்மாவுக்கு என்னவோ போலானது. காணாத மகனை தெருவில் கண்டபோது அவனது புதிய கூட்டாளிகளும், வழமையல்லாத நடை, உடை,பாவனையும் அம்மாவுக்கு எதையெதையோ எண்ணவும் வைத்தது. அம்மாவும் இப்போதும் பழைய அப்பாவி அம்மா இல்லையே.


மகன் இவ்வழியில் கரும்புலியாய் தெரிவு செய்யப்பட்டுவிட அம்மா வெளிவேலைகளில் இருந்து நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது.' தேவை ஏற்படும் போது அவசரமாக அழைக்கப்படுவீர்கள்' என்ற விளக்கத்தை அம்மாவால் முற்றாக நம்பவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. தனக்கு கூறப்படுவது போலிக்காரணம் என்று தெரிந்தாலும் அதற்கு மேல் அம்மாவாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போக அம்மா, வழமையான அம்மாவாக வாழத்தொடங்கிவிட்டா.


அம்மாவின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க அல்லது தீர்த்து வைக்க காரணமாக இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்தது. அம்மாவின் உறவுக்கார பெண்மணியொருவர் கொழும்பில் இருந்து வந்திருந்தார். மகனை கொழும்பில் கண்டதை அம்மாவுக்குச் சொன்னது மட்டுமின்றி, தன்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமென்று அவன் சொன்னதையும் வலு கவனமாய் மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்.


அம்மாவின் மனப்புதிர் மெல்ல மெல்ல விடுபட்டுப்போகும் காலத்தின் ஒரு நாளில்,'சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று' வீடு வந்தான் மகன். பழைய கோபத்தை நினைவூட்டுவதும் செல்லம் கொஞ்சுவதுமாய், அதே பழைய மகனாய்........ஒரே கொண்டாட்டம். வீடு நிறைந்து போனது. அப்பாவி அப்பாவுக்கும் அக்காளுக்கும், உறவுகளுக்கும் மகனது வீடு வருகையின் காரணம் தெரியாமல் ஒரே கொண்டாட்டம். அம்மாவுக்கு மட்டும் என்ன தெரியும்? ஒன்றுமே தெரியாதுதானே.'மகனது புதிய நடை, உடை பாவனையில்,வித்தியாசம் விளங்காது''அவன் கொழும்புக்கு போனதும் தெரியாது''அவனது அன்ரி வந்து ஒன்றுமே சொல்லவும் இல்லை' ஒரே மகிழ்ச்சி வீடு நிறைந்த மகிழ்ச்சி..

பிள்ளை 'அம்மாவை தனக்கு சாப்பாடு ஊட்டி விடக்கேட்டது' அம்மாவுக்கு நான் தான் தீத்துவேன் என்று கூறி உணவூட்டிவிட்டதும் ஏன் என்று வீட்டில் மற்றயோருக்குத் தெரியாது.'தம்பி இப்ப தான் செல்லம் கொஞ்சுது என்று அவர்கள் பரிகசித்து பேசும் போதும் அம்மா கண்ணீர் மறைத்து, முகம் சிரித்து,'உணர்வு மறைத்து உணவூட்டி.... வீட்டில் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான். அம்மாவுக்குத்தான் ஒன்றும் தெரியாதே.


மகன் முகாம் திரும்ப முன்புபோல் அவசரப்படவும் இல்லை. எல்லோரிடமும் விளையாட்டும் , கதையுமாய் கொண்டாடி, உணவுண்டு, பாய்போட்டு நித்திரை கொண்டு அவன் முகாம் திரும்பும் வேளையில் அன்றைய பொழுது இரவைத் தொட்டுவிட்டிருந்தது.

அன்று அவன் சொல்லிவிட்டுப் போனது போல தனியாக வரவில்லை அரை டசினுக்கு அதிகமான அவனது நண்பர்களால் வீடு மீண்டும் களைகட்டியது. அவனது அம்மா,அப்பா, அக்காக்கள், வந்திருந்த அனைவருக்கும் அம்மா, அப்பா,அக்கா ஆயினர். அத்தனை பிள்ளைகளும் மாறி மாறியும் ஒன்றாயும் அம்மா.....என்று உறவு சொல்லி அழைக்க வீடு களைகட்டியது.


ஒன்றும் தெரியாத அப்பாவி அப்பாவும் அக்காக்களும் அவனது புதிய நண்பர்களின் உற்சாகத்தில் கரைந்து போயினர் அம்மாவும் தான். அவவுக்கும் தான் ஒன்றுமே தெரியாதே. அவவும் சேர்ந்து அந்த உற்சாகத்தில்........ வந்திருந்த எல்லோருக்கும் தடல்புடலாய் சமையல், சாப்பாடு என்று வீடு அமர்க்களப்பட்டபோதும், குசினியும் முற்றமுமாய் பம்பரமாய் சுழன்ற போதும் அப்பாவி அப்பாக்கும் அக்காக்களுக்கும் ஒன்றுமே தெரியாதே.... அம்மாவுடன் வீடே வாசல் வரை வழியனுப்ப அவர்கள் புறப்பட்டு போயினர்.


*********************************


அவர்கள் விடைபெற்று போயினர். அந்தத்தாயின் வழியனுப்பலின் பின்னர் அவர்கள் தாயகத்திடமும் விடை பெற்றுப் போய்......போய் விட்டனர்.


நல்ல சூரியனின் பெயரால் கொடியோரின் ஆக்கிரமிப்புக் கதிர்கள் விலிகாமத்து மண்ணை சுட்டெரித்த காலத்தின் ஒரு பொழுதில் அவர்கள் எதிரியின் கோட்டைக்குள் புதுவரலாறு படைத்தனர்.


வீரமும் அர்பணிப்பும் மட்டுமன்றி மனிதாபிமான நிதானமும் நிறைந்த அவர்களது வெற்றிச் செய்தியால் உலகமே உறைந்து நின்ற வேளையில், தமிழீழத்து எல்லோரையும் போலவே அவனது குடும்பத்திலும் மகிழ்ச்சி வளிப்பாடுகள். ஆனால் அம்மா மனதில்?...


***********************************


மகனது பொறுப்பாளர்களை அம்மா சந்திக்கும் அந்த நாள் வந்தேவிட்டது. மகன் எங்கே? என்பதற்கான வழமையயான பதில்கள் அம்மாவிடம் எடுபடாமல் போக, சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிப்போனது.


மனுசியின்ர வாயை முதலே அடைச்சுப்போட வேணும். கதைக்க விட்டால் தப்பேலாது' என்ற சிந்தனையில் மகன் நிற்குமிடம் அவனைச்சந்திப்பதில் உள்ள வசதிக் குறைவு...என பொருத்தமற்ற பொய்யான பதில்களுடன் பொறுப்பாளர்.


'மகன் தூரத்தில்...., மட்டகளப்பில்...நிற்கிறான்...வர கொஞ்சம் காலம் செல்லும்' அம்மாவின் முன்னால் இரத்தம் நீராகிப்போன பொறுபாளரின் வார்த்தைகள்.


அவரது உயிரற்ற வார்த்தைகளை மீறி அம்மாவின் உறுதியான கேள்வி. 'எப்படி என்ர மகன் கடைசி வரைக்கும் சரியாக செயற்பட்டவனே.........?


'எனக்கு எல்லாம் தெரியும். நான் பெத்து வளத்த பெடியன் அவன் சொல்கிறது பொய் எண்டு எனக்குத் தெரியாதே' 'உப்பிடி எத்தனை பொய்களை எனக்கு நீங்கள் சொல்லித்தந்திருப்பியள்'


'வீட்ட வந்து அவன் நித்திரை கொள்ளேக்க அவன்ர பொக்கற்றுக்குள்ள பார்த்தன் வட்டுக்கோட்டை அடையாள அட்டை வச்சிருந்தவன்' என்ர பிள்ளை அம்மாவுக்கு சொல்லேலாதெண்டு எனக்குத் தெரியும். அதில நான் ஏதும் பிழை விட்டிடக்கூடாது என்று தான் நானும் அவனோடை ஒன்றும் கதைக்கேல்லை.


'செய்தியை கேட்டுப்போட்டு அக்கா வீட்டை ஒடிப்போய் ரூபவாகினிதான் பார்த்தனான்' முகம் தெரியாததால ஒருதருக்கும் விளங்கேல்லை – பெத்ததாய் எனக்கு தெரியாமல் போகுமே.


'றெயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல கிடக்கிறான் என்ரபிள்ளை...'


அடக்கி வைத்ததெல்லாம் வெடித்ததால் குமுறி அழும் அம்மாவிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. உலகத்தில் உள்ள பொய்கள் எல்லாம் எங்கோ ஓடிப்போக விக்கித்து நின்றவரிடம் அம்மா அந்த கடிதத்தைக் கொடுத்தா.

தன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம்.


எங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில். எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்து போன அந்தக் கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான்.


முத்தாய்ப்பான வரிகள்... உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா. தமிழீழத்தில் அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா


அம்மா தாயே உங்களை எமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே.


தாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா...


*************************************