லெப்.கேணல் - பிரசன்னா

நேசிப்பின் உச்சம்.....பிரச(அ)ண்ணா......
அடங்காத் தமிழன் பண்டாரவன்னியனின் ஆட்சியில் பனங்காமம் அவனது கோட்டைகளில் ஒன்று. காலங்காலமாய் தமிழன் வரலாறு சொல்லும்
வன்னி மண்ணில் பாண்டியன் குளம் பிரதேசத்துக்கு
பனங்காமத்தால் தனிச்சிறப்புண்டு. எங்குபார்த்தாலும் நீர் நிரம்பிய குளங்கள்இ பசுமை போர்த்திய வயலும் வாழ்வுமாய் கறவைகளும்இபறவைகளும் மனதுக்கினிய மகிழ்வான மண்.
அங்கு வாழ்பவர்களில் இனிமையும் தனித்துவமும் தவழும். இப்பிரதேசத்தின் மத்தியில்
சினிமாப் படங்களில் வருவதுபோல் பெரிய பண்ணையார் வீடுஇ தமிழனின் நிறத்தோடும்இ நிமிர்ந்த மிடுக்கோடும் அனைவரையும் கட்டுப்படுத்தும் கண்ணின் வீச்சோடும் நிற்பார் அவர்தான் அவ்வூரின் கனவான் ஜே.பி. கந்தையர்
பேருக்கு ஏற்ற கண்டிப்பும் கனிவும் கொண்ட சமாதானத்தின் நீதவான். அந்த வீடு கனிமப் பொருட்களால் கட்டப்பட்டதாய் எனக்குத் தோன்றவில்லை அன்பும்இபாசங்களாலும் உருவான தாய்வீடு. நிறை சொந்தங்கள் வாழ்ந்த மாடம். விடுதலைக்காக மகனொருவன் போராளி பாஸ்கரனாய் களத்தில் நின்றான்.
1990ல் பாண்டியன் குளம் வட்ட அரசியல் பொறுப்பாளர் பிரசாந் அண்ணருடன் அப்பிரதேச அரசியல் வேலைகளுக்காய் நான் நியமிக்கப்பட்ட காலப்பகுதியில்
இக்குடும்பத்தின் பாசத்தில் எனக்கும் ஒரு பங்கு கிடைத்தது. அப்போதுதான் இந்த அரன்மனையின் இளவரசனின் பழக்கம் எனக்கு ஏற்பட்டது அவர்தான் ஜீவா எனும் துடிப்பையும் துருதுருப்பையும் உடைய உயர்ந்த ஒருவன் அவரை எப்போதும் ஜீவாஅண்ணா என்றுதான் அழைப்பேன்.
1990ம் ஆண்டின் மாவீரர்நாள் செயற்பாடுகளில் இவரின் பங்கு மிகப் பெரியது. காலம் நகர்கிறது
1991ல் ஆனையிறவுச் சமர்க்களப் பணிகளில் ஜீவாண்ணரும் அவரின் நண்பண் ஆனந்தனும் களத்தினில் கண்டேன்.(முள்ளிவாய்க்கால் சமரில்
லெப் கேணல் ஆனந்தன் வீரச்சாவு)
ஆச்சரியமும் தேச விடுதலைமீதிருந்த இவரின் பற்றுதியையும் பார்த்து வியந்துபோனேன்.
விடுதலைப் பயணத்தில் காலங்கள் ஓடின பின்னாளில்
புலனாய்வுத்துறையின் பொறுப்பாளர்களில் ஒருவராக 'பிரசண்ணா' என்ற பெயருடன் வேங்கைப் புலியாய்க் கண்டேன். ஆளுமையும் ஆற்றலும் புலனாய்வோடு ஊடுருவும் பார்வையளனாய் பார்த்தபோது மெய்சிலிர்த்தது
நான் பார்த்த ஜீவாண்ணா முற்றிலும் மாறுபட்டு
முன்னுதாரணமாக நின்றான். ஆனால் ஒரு செயற்பாடு மட்டும் பழைய ஜீவாவை என் முன் நிறுத்தியது அவரது விளையாட்டு உதைபந்தாட்டக் களத்தில் சிறுத்தையைவிட வேகமாக ஓடின அவன் கால்கள்.துடுப்பாட்டத்திலும்இபூப்பந்தாட்டத்திலும் விளாசித்தள்ளினான். நட்பு வட்டாரத்தில் இவரே ராஜா அந்தளவுக்கு இவரைச்சுற்றி நண்பர்கள் கூட்டம். கடமையில் நேர்மையும்இ நேர்த்தியும்
குறித்த நேரத்திற்கு சமூகமளிப்பதை கடிகாரம் கூட இவரிடம்தான் கற்றிருக்க வேண்டும்.புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் நம்பிக்கைக்குரியவராகவும் தேசியத்தலைவரின் விருப்பதுக்குரியவராகவும் தனது பணிகளை வேகமாக செயல்படுத்தியதால்
இவரின் ஆளுமையை நேரடியாக தலைவர் அவர்கள் கண்ணுற்றதால் தலைமைச் செயலகம் மக்கள் தொடர்பகம் எனும் பிரிவை உருவாக்கி
பிரசண்ணாவை பொறுப்பாளராக நியமித்த தலைவர்
'பிரசண்ணா இதுவும் ஒரு புலனாய்வு வேலைதான் எமது மக்களின் பிரச்சனையை அறிந்து அவர்களுக்கான தீர்வை உடனடியாக பெற்றுக் கொடுக்கவேனணும். தலைமைச்செயலகம் என்பது தாய்வீடு மாதிரி இங்கு வருபவர்கள் தீர்வோடு சந்தோசமாக திரும்ப வேண்டும்' என்றார். தலைவரால் ஒப்படைக்கப்பட்ட வேலையைத் திறம்பட முன்னெடுத்தார் இவருடன் இணைந்து நானும் பயணித்தேன்.
இறுதிப் போரில் சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்புப் போர் மன்னார்ப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டபோது எமது படையணிகள் தம்பனை.உயிலங்குளம்இஅடம்பன் ஆகிய பெரும் வெளிகள் நிறைந்த சமர்க்களங்களில் சண்டையிட்டன இந்நாளில் படையணிகளுக்கும்
தலைமைச்செயலகத்துக்குமான தொடர்பாடல்இ தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டிய பிரத்தியேக தகவல்கள் போன்ற மிகப் பொறுப்பான களப்பணியை எறிகணை மற்றும்
சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலுக்கு மத்தியிலும் தன் உயிரைப் பற்றிய எந்த பயமுமின்றி பாய்ந்து திரிந்த வேங்கை.
மிக நல்ல மனித நேய பண்பாளன் நிலமை அறிந்து உதவும் புனிதன் தன் குடும்பம் தான் என்ற சுயநலம் நான் கண்டதில்லை பிரச(அ)ண்ணாவிடம்
அவரின் முகாமிலிருந்து சில கிலோமீற்றர் தூரத்தில்தான் வீடு ஆனால் ஒருமதியவேளைகூட வீட்டில் சாப்பிடமாட்டார் முகாமில் எம்முடந்தான் அவரின் உணவு அப்படியொரு அற்புதன்
எந்தவொரு மாவீரரின் இறுதி நிகழ்விலும் பிரச(அ)ண்ணாவின் பிரசன்னமிருக்கும் கனகபுரம் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட பெரும்பாலானா மாவீரர்களின் வித்துடல் சுமந்தவர்
போராளிகளின் வீரச்சாவில் கசிந்துருகும் இவரின் மனம்.
2008 மாவீரர் நாள் அன்று கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு அருகில் மாவீரருக்கான சுடரேற்றி வணங்கிவந்தான் பிரசண்ணா எனும் வீரப்புலி.
சிறிலங்காப் படைகள் மன்னாரிலிருந்து ம்க்களை விரட்டி விரட்டி கொன்று குவித்து நிலத்தை ஆக்கிரமித்தவண்ணம் நாளுக்கு நாள் ம்க்கள் இடம்பெயர்ந்துகொண்டிருந்த கொடுமையான பொழுதுகள் அவை.
மக்களனைவரும் சுதந்திரபுரம் நோக்கி எறிகணை மழைக்கு மத்தியில் உயிர்ப்பலி கொடுத்தவண்ணம் நகர்ந்தனர் சுதந்திரபுரத்தில் பிரச(அ)ண்ணாவின் அப்பா ஜே.பி ஐயாவின் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது அக்காணி முழுவதும் தறப்பாள் கொட்டகைகளில் மக்கள் வாழ்விடமாக மாறியது.
இக்காலப்பகுதியில் தர்மபுரம் நெத்தலியாற்று முன்னரங்க களத்தில் சண்டையின் ஒரு பகுதியைப் பொறுப்பேற்று போராளிகளுடன் களமுனைச்சண்டையில் பிரச(அ)ண்ணா நின்றார்.
அந்த நாளின் மாலைப் பொழுதொன்றில் சுதந்திரபுரத்திலுள்ளஇவர்களது காணியில் இடம்பெயர்ந்திருந்த குடும்பத்தின் மகன் வீரவேங்கை திலகன் வீரச்சாவடைந்து புகழுடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த்தது அதனை அறிந்த பிரச(அ)ண்ணா அங்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சிறிதுநேரத்தின் பின் புறப்படுகிறார்
அவருடைய குடும்பத்தினர் அவரின் மனைவி பிள்ளைகளிருவர் அங்கிருந்தபோதும் தான் ஒரு கணவன் தந்தை என்ற தனி வாழ்வின் சுயநலத்திலிருந்து விடுபட்ட நிலையில் தனது மோட்டார் சைக்கிளை நோக்கிய வேகநடையுடன் அவர் கால்கள்.... பிள்ளைகளிருவரும் அப்பா....அப்பா....என்றபடி பின்னால்......
மனைவியும் அம்மாவும் விம்மலை அடக்கியவாறு பின்னால் தொடர்கிறார்கள் பிள்ளைகளின் அப்பா மீதான பாசத்தவிப்பை பார்த்து தாங்க முடியாமல் அவரின் கையைப்பிடித்து பிள்ளைகள்....என்றேன்...
என் கையைத் தட்டிவிட்டதும் மோட்டார் சைக்கிள் உறுமியதும் ஒரு கணத்தில் நிகழ்ந்தது கலங்கிய என் கண்களில் அந்த விம்மல்கள் விழுந்து என் இதயம் வெடித்தது....
இதை எழுதும் இக்கணத்திலும் கண்கள் வழிகிறது.
ஆசைகளுக்குள் அடங்கிப்போகும் இவ் உலக வாழ்க்கையில் அசாத்திய மனிதனாய் இவரால் மட்டும் எப்படி முடிந்தது...!!!!???
அம்மாஇஅப்பாஇமனைவிஇபிள்ளைகள் இதற்காகவே அனைத்தையும் அர்ப்பணித்து வாழும் மானுடத்தில் தாயகத்தை மட்டும் நெஞ்சிலேற்றி நடந்த மாவீரன்
இவர் அடிக்கடி கூறும் வார்த்தை
'எங்களுடன் நிண்டவர்கள் எல்லாரும் வீரச்சாவடையிறாங்கள்
அவங்கட தியாகங்கள நாங்கள் வீணடிக்கக்கூடாது எங்கட குடும்பங்கள் நாங்கள் இல்லாமல் வாழப்பழகவேணும்' என்பார்.
ஆனால் பாசத்தில் நீராக குளிரும் நெஞ்சம் கொண்டவர் அடுத்தவர் மீதான அன்புரிமை கொண்ட அக்கறையானவர்.
புலனாய்வுத்துறை மாவீரன் சத்திவேலின் அக்கா அண் மையில் சிங்கப்பூரில் இருந்து என்னுடன் கதைக்கும்போது பிரசண்ணா அண்ணா எங்களுக்கு அறிவுரை சொல்வார்இநல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டுமென்று கடிதம் எழுதி அனுப்புவார் பாசக்கார அண்ணா என சொல்லி அழுதார்.... உண்மை மனிதம் உள்ளங்களில் உயிர்வாழும் என்றும்.
இராணுவ ஆக்கிரமிப்பின் உச்சம் மாத்தளன் வலைஞர் மடம் என நெருங்கிய நேரம் இவரின் பள்ளித்தோழனும் பாசறைத்தோழனுமான லெப் கேணல் ஆனந்தனின் வீரச்சாவு இவரின் மனதை வாட்டி வதைத்துவிட்டது.
ஒவ்வொரு மாவீரர்களின் கனவையும் நெஞ்சில் நிறுத்தி எதிரியுடன் சமராடும் வீரத்திலிருந்து விலகாமல் முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் சண்டை உக்கிரம்பெற்ற 16.05.2009 ல் காற்றும் கடலும் ஒரு நொடி அசையாமல் நின்றிருக்கும்
பிரசண்ணா எனும் புலிவீரனின் மூச்சுக்காற்று இந்த மண்ணுக்காய் நிறுத்திக்கொண்டபோது.................
மண்டியிடாத மாவீரம் ஒன்று ஓய்ந்து போனது...
மண்மீட்பே அவனது வாழ்வானது...
நீக்கமற எங்கள் நெஞ்சத்தில் நீங்களே நினைவானது...
உங்களை நேசித்த நாட்களின் நினைவிலிருந்து....
அ.பிரியன்.